பாட்டி சொல்லைத் தட்டாதே
மிகவும் நெருங்கிய ரத்த சொந்தமான ஒருவரது திருமணத்திற்கு என்னையையும் சேர்த்து எங்கள் வீட்டில் எல்லாருக்கும் புதுத்துணி எடுக்க கிளம்பலாம் என்று எல்லோரும் புறப்படும் வேளையில், என் தாய் அப்போது நானணிந்திருந்த உடையை மாற்றிவிட்டு வேறொரு நல்ல ஆடையுடுத்தி வரும்படி கூறினார்கள் (என்னுடைய ட்ரெஸ்ஸிங் சென்ஸ் பற்றி என்னை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும், அப்படி ஒன்று என்னிடம் இல்லையென்று).
அதற்கு நான், "ஏம்மா இதுக்கு என்ன குறைச்சல் நல்லாத்தானே இருக்கு, நீங்க எடுத்து குடுத்ததுதானா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் கண்றாவியா இருக்கு சகிக்கல, நாம போட்டுப்போற டிரெஸ்ஸே கடைக்காரனுக்கு காட்டிக்குடுத்துரும் நாம வாங்குவோமா மாட்டோமா எப்படிப்பட்டவங்கனு, காஸ்ட்லியான டிரெஸ்ஸ கண்ணுலகாட்டவே மாட்டாங்க, ஒழுங்கா போய் மாத்திட்டுவான்னா வா" என்றார்கள்.
உடனே நான், "Dont judge a book by its coverனு பழமொழியிருக்கே, ஒன்ன வாங்குறதும் வாங்காம போறதும் நம்ம இஷ்டம்தானம்மா, இதுல நம்ம டிரஸ் நம்மள என்னாப்பண்ணுச்சு, எவ்ளோ காஸ்ட்லினாலும் புடிச்சிருந்தா நாம வாங்கத்தான போறோம்" என்றேன். "அதெல்லாம் தெரியாது, 'இரக்கப் போனாலும் சிறக்க போகனுமாம்'மா இப்படி ஒரு பழமொழி இருக்கு தெரியுமா?, மேலும் விபரங்களுக்கு உன் பாட்டியை அணுகவும்" என்றார்கள்.
நானும் பாட்டியிடம் சென்று, "அந்த காலத்துலயே சாகப்போறதுக்கு முன்னாடியே நல்லா மேக்கப் போட்டுட்டுபோய் சாகணும்னு பழமொழி சொல்லிவச்சிருக்காங்களா பாட்டி?" என்றேன். அது அவர்களுக்கு புரியவில்லை என்பதை குறிப்பால் அறிந்தவனாய், "அதாம்பாட்டி, ஏதோ 'இறக்க போனாலும் சிறக்க போகணும்'மாம்ல, அப்டினா என்ன?", என்றேன். அதற்கு அவர்கள், "நான் பெத்ததுபெத்த முட்டாப்பயலே, அது அப்படியில்லை இரு சொல்றேன்", என்றார்கள்.
"சரி சொல்லுங்க, உங்க விளக்கத்தை வெளாவாரியா..." என்றேன். "மொதல்ல அது 'இறக்க' கிடையாது 'இரக்க', பெரிய 'ற' இல்ல சின்ன 'ர', அதாவது இரக்கனா 'பிச்சையெடுக்க', பிச்சையெடுக்க போனாலும் ஓரளவுக்கு நல்ல டிரஸ் போட்டுட்டுதான் போகணும் அப்போதான் தட்டுல காசுவுழுவும்" என்றார்கள். நான், "நல்ல டிரஸ் போட்டிருந்தா எப்டிவுழுவும் கம்மியாத்தானே வுழும், நீங்க மாத்தி சொல்லுறீங்களே?!", என்றேன்.
அதற்கு அவர்கள், "நீ பிச்சக்காரன மட்டும் பாக்காத, உதவி கேக்குறவங்களக்கூடத்தான் இரக்கபோறவங்கனு சொல்லுவாங்க, ஏன் புலவர்கள்லாம் அந்தகாலத்துல ராஜாக்கிட்ட பாடி நெறையா பரிசு வாங்கிட்டு வருவாங்குல, வாய்ப்பு கிடைச்சவன் உள்ளபோய் பாடி வாங்கிட்டு வருவான், கிடைக்காதவன் வாசல்லையே கேட்டு வாங்கிட்டு இருப்பான். இது ரெண்டுக்கும் பொதுவான விஷயம் நம்ம உடையும், தோற்றமும் தான்" என்றார்கள்.
"அப்போ அவுங்க ரெண்டுபேரும் ஒன்னுன்னு சொல்லுறீங்களா?", என்றேன். பதிலுக்கு, "உனக்கு இப்படி சொன்னாப்புரியாது, உனக்கு புரியுரமாரியே சொல்லுறேன், விவசாயி கோவணமோ இல்ல வேட்டிசட்டையோ போட்டுட்டுப்போய் பேங்க்ல லோன் கேட்டா மாக்ஸிமம் எவ்ளோ கிடைக்கும், அதுவே கோட்சூட் போட்டுட்டு போய் கேட்டா எவ்ளோ கிடைக்கும் நல்லா யோசிச்சுப்பாரு?", என்றார்கள்.
நான் ஏதோ அரைகுறையாக புரிந்தவனாக, "பாட்டி... அப்போ ?!", என்றேன். நான் புரிந்துகொண்டதுபோல் தெரிந்ததைப்பார்த்து, "கரெக்ட், 'விஜய் மல்லையா', 'நீரவ் மோடி' இவனுகளுக்கெல்லாம் அவனுக கேக்காமலே கூப்ட்டு கூப்ட்டு கோடிகோடியா கடன் குடுப்பானுக, ஆனா நம்ம விவசாயிங்க இம்புட்டுங்காண்டி கேட்டா நாயா அலையவிடுவானுக, இதுலயும் ரெண்டுக்குமே ட்ரஸ்தான் அடிப்படை, தோற்றம்தான் தீர்மானிக்குது" என்று முடித்தார்கள்.
எனக்குள் அப்போது ஒரு கேள்வி எழுந்தது, '5000கோடி 7000கோடி கடன்லாம் அவனுக கேக்காமலே அவனுகளுக்கு குடுத்தாலும் Collateral, Bank balance, Background எல்லாமே பாத்தாக்கூடவும் உதவி அல்லது இரக்கம் என்பது ஆள் பார்த்துத்தான் வருகிறது, அந்த உதவிக்கான அவசரம், அவசியம் பார்த்து கிடைப்பதில்லை வருவதும்மில்லையே, வெறும் 50,000 ரூபாய் கடனுக்காகலாம் தற்கொலைகள் இங்கு ஏன் நிகழ்கின்றன?', என்று.
நான் அப்புறமேலு டிரஸ் மாத்திக்கிட்டுபோய் புது டிரஸ்லாம் நாங்க எடுத்துக்கிட்டு வந்தாச்சு, இத படிச்சுக்கிட்டிருக்கிற நீங்க இப்போ என்ன செய்யப்போறீங்க நாளைக்கு உங்க வீட்டுக்கும் உதவின்னு யாரும் கேட்டுவந்தா ஹெல்ப் பண்ணுங்க, கேக்குற ஹெல்ப்ப பாருங்க கேக்குற ஆள பாக்காதீங்க அவசியமானுமட்டும் பாத்துட்டு பண்ணுங்க. ஆனா இது, கூடிய விரைவில் ஓட்டு கேட்டு வரும் 'பிச்சைக்கார' அரசியல்வாதிகளுக்கு பொருந்தாது மக்களே உஷார்.
"இரக்கப்போனாலும் சிறக்க போகணும்", என்கிற இப்பழமொழியை இக்கால சூழ்நிலைகளுக்கு எல்லாருக்கும் எளிதாக புரியும்படிக்கு நிகழ்கால எடுத்துக்காட்டோடு கூறிய என் பாட்டியின் அறிவைக்கண்டு நான் வியக்கிறேன், அவர்களும்கூட இக்கால அரசியலை நன்றாக அவதானிக்கிறார்கள் உற்றுநோக்குகிறார்கள் என்பதும் புலனாகிறது. நீங்களும் உங்கள் வீட்டில் இப்படி யாரேனும் இருந்தால், அவர்களிடமும் ஏதேனும் கற்றுக்கொள்ளுங்களேன்?!.

கருத்துகள்
கருத்துரையிடுக