சில நேரங்களில் சில மனிதர்கள்

ஏனோ எனக்கு தெரியவில்லை இத்தலைப்பிட்டதற்கும் நான் சொல்லவருவதற்கும் நேரடித்தொடர்பு உள்ளதா, இல்லை வெறுமனே இதுவொரு வெற்றிபெற்ற (அ) கவர்ந்தீர்க்கக்கூடிய தலைப்பாதலாலோ இட்டிருப்பேனா என்று உறுதியாக தெரியவில்லை. குறைந்தபட்சம் இத்தலைப்பிற்கு கொஞ்சமாவது அர்த்தம்சேர்க்கும் வகையிலாவது இப்பதிவு இருக்குமென்று நம்பி, ஆரம்பிக்கிறேன்.

"எப்போதும்போலில்லாமல் சில நேரங்களில் சில மனிதர்கள், நமக்கு வித்தியாசமாகித் தெரிவார்கள். ஏன் எதற்கு எப்படி என்று தெரியாமலேயே நமக்கும் அவர்களது அவ்வித்தியாசம் சட்டென பிடித்துப்போய்விடும். அவர்களது குணமாக அது எப்போதுமே இருந்திருக்காது, ஆனால் ஏனோ திடீரென நாம் எதிர்ப்பார்த்திருக்காத வேளையிலே அவர்களது அந்நேரத்தைய சிறுமாற்றமானது நாம் அவர்கள்மீது நினைத்து வைத்திருந்த ஒட்டுமொத்த பிம்பத்தை அப்படியே திருப்பியும்கூட போட்டுவிடும்.

உதாரணத்திற்கு, எப்போதும் நம்மை கரித்துக்கொட்டிக் கொண்டிருக்கும் அப்பா நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, நமக்கு திடீரென விக்கலெடுக்கையில் நாம் கேட்காமலேயே தண்ணீர் கொண்டுவந்து தருவது. வகுப்பில் ஆசிரியர் நின்று  பாடமெடுத்துக் கொண்டிருக்கையில் முன்பெஞ்சிலிருந்து நமது பேனாவோ அல்லது புத்தகமோ விழும்போது அவ்வாசிரியரே அதனை சட்டென எடுத்துத் தருவது. வேகமாகவரும் வாகனத்தை நாம் கவனிக்காது சாலையை கடக்கையில் நமது விருப்பமின்றி ஆகிப்போன கணவரோ மனைவியோ சட்டென கைப்பிடித்திழுத்து காப்பது. நமக்கு எப்போதும் தொந்தரவுமட்டுமே செய்துவரும் நம் நண்பன் நாம் ஏதாவதொன்றை கேட்டதும் என்ன ஏதென்று கேட்காமல் உடனே அதனை அப்படியே கேட்பதும் செய்வதும், இப்படியே நிறைய உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமானால், 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் 'நீ சொன்னா மாடிலருந்து குதிக்கவுஞ்செய்வேன்' என்று விஜய்சேதுபதி தன் நண்பனிடம் சொல்வதற்கு காரணமாயிருந்த ஒரு அற்ப சிறு உதவியைப்போல.



அவர்கள் என்றுமே இப்படி இருந்ததுமில்லை இனியும் இப்படியே இருந்துவிடப் போவதுமில்லை,  இவ்வாறு அத்தகையவர்களது அந்நேரத்தைய அச்சிறு மாற்றம், அச்சிறு அக்கறை, அச்சிறு கரிசனை, அச்சிறு கவனிப்பு, அச்சிறு உதவி போன்ற இவைகள் அவர்களிடையே நாம்கொண்ட உறவை, மதிப்பை, அன்பை இன்னும்கூட கூட்டிவிடும். என்னா ஆளுடா, ச்சே... இவ்ளோநாளு இவுங்களப்போய் தப்பா நினைச்சுட்டோமே, இவுங்களுக்குன்னு நான் இதுவரைக்கும் ஒன்னுமே செஞ்சதில்லையேனு ஓவரா பீல்லாம்கூட பண்ணியுமிருப்போம்.

அவ்வாறே நாமும் பிறருக்கு நமக்கேத்தெரியாமல் இத்தகையவொரு உணர்வினை அவர்களுக்குள்ளும் ஏற்படுத்தியிருந்திருக்கலாம், அவர்களாகவே சொல்லாமல் நமக்குத்தெரியாது. எனக்கு அப்படி நிறையபேர் இவ்வாறானா சிறுசிறு செய்கைகள், உபசரிப்புகள், கவனிப்புக்கள், உதவிகள் மூலம் அவர்களாகவே அவர்கள்மீது நான்கொண்டிருந்த பிம்பத்தை உடைத்தெறிந்திருக்கின்றனர். இதில் ஆண்களுமுண்டு பெண்களுமுண்டு, உறவினர்களுமுண்டு நண்பர்களுமுண்டு.

அவர்களுக்கு நான் என்னப்பெரிய கைமாறு செய்துவிடப்போகிறேன் என்று பெரிதாக எண்ணிப்பார்க்கையில், உயிரையும்கூட தரலாம் என்று சிலசமயம் யோசிக்கத்தோணும். அவ்வாறு யோசிக்கையில் உதவியது பெண்களாயிருக்கும் பட்சத்தில், அப்பெண்கள் யாராயிருந்தாலும் அவர்களை ஒருபோதும் அழவைத்துவிட கூடாது அல்லது அவர்களது அழுகைக்கு நான் ஒருபோதும் காரணமாகிவிடக்கூடாது என்றெண்ணத்தோணும்.

பெண்களைப் பொருத்தமட்டில், அவர்கள் கற்பிற்காக உயிரையும்கூட துச்சமெனமதித்து மாளவும்கூட செய்வார்களெனில், உயிரைவிடவும் கற்பு பெரிது என்பது நிரூபணமாகிறது (காலங்காலமாக நாம் அப்படி வளர்க்கப்பட்டுமிருக்கிறோம், அது ஏனோ பெண்களுக்கு மட்டும் உரித்தானதுபோல பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோம்).

 உதவியது என் நண்பனாகயிருக்கும்பட்சத்தில், ஏன் நானுங்கூட பெண்ணாகி என் கற்பினை அத்தகையவனிடம் இழக்கக்கூடாதென வித்தியாசமான வினோதமான கற்பனையும் ஓரிருமுறை வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு நண்பன்களிடம் கொண்டிருக்கிறேன் நான், அவன்கள் ஆல்ரெடி கமிடெட் ஆனவன்களாகக்கூட இருப்பான்கள்.  இதெல்லாம் நடைமுறைக்கு கொஞ்சங்கூட சாத்தியமில்லையென்றாலும் இவ்வாறான யோசனை எனக்கு வந்துள்ளது."

இவ்வாறெல்லாம் என் நெருங்கிய நண்பனொருவன் என்னிடம் அவனது எண்ணங்களை கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்துக்கொண்டான். இதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுமுடித்த  அந்தநொடியில், இப்படியும்கூடவா என்று நினைத்து எனக்கு அவனை இன்னும் பிடிக்கத்தொடங்கியது ஏனெனில்,

இரண்டாம் பத்தியிலிருந்து மீண்டும் வாசியுங்கள்.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொரோனாவால் விளைந்தவை

வாழ்க்கைத்துணை

மாற்றமில்லை