கொரோனாவால் விளைந்தவை

Quarantine - தனிமைப்படுத்துதல்
Pandemic - சர்வதேச பரவல்
Pestilence - கொள்ளை நோய்
Plagues - வாதைகள்
Lock-down - முடக்குதல்
Social distancing - சமூக விலகல் / சமூக இடைவெளி
Write off - ஒத்திவைப்பு செய்தல் & Waive off - தள்ளுபடி செய்தல்
(முதலாவதில், வாங்கிய பணத்தை வாங்கியவர்கள் திருப்பித் தரவேமாட்டார்கள்;
இரண்டாவதில், பணம் கொடுத்த வங்கிகள் பணத்தை திரும்பப்பெறவே மாட்டார்கள்)
Hydroxychloroquine - மலேரியாவிற்கான மருந்து.
Heist - திருட்டு
இத்தகைய பல புதிய புதிய வார்த்தைகளை நாம் கற்றுக்கொள்ள வழிவகை செய்தது.

"Positive" என்றவொரு நல்ல வார்த்தையை நம் அனைவரையும் வெறுப்புக்கொள்ள செய்தது. இரு தாயக்கட்டைகளில், ஒன்றில் தாயமும் மற்றொன்றில் மூன்றும் விழுந்தால் அது 'சோநாலு', இரண்டிலும் இரண்டிரண்டு விழுந்தால் அது வெறும் நாலு என்கிற வேறுபாட்டினை அறியச்செய்தது. 'போடா... கன்னட பொல்லாதவன்' என்று ஒருவரை திட்டுவதற்கு புதிய வசைமொழியை தந்திருக்கிறது. 30000 கோடியில் 40% என்பது 20000 கோடி என்கிற பள்ளிகளிலும் நாம் படித்திராத ஒரு அரும்பெரும் கணக்கினை அறியசெய்தது. டல்கோணா காஃபியை முகங்கோணாமல் குடிக்க முடியாது என்று உணர்த்தியது.

கானா நாட்டு Pallbearers எனப்படும் சவப்பெட்டி தூக்குபர்களின் திறமையை உலகறியசெய்தது. சமுத்திரத்துக் கனியானது எதுவாக வேண்டுமானாலும் உருமாறலாம் என்பதை உணர்த்தியது. சும்மாயிருப்பதும்கூட ஒருவித சுகமான சுமைதான் என்பதை காட்டியது. சிவனேனு இருந்த, மன்னிக்கவும் நபியேனு இருந்த அரேபியர்களை ட்விட்டர் பக்கமாய் இழுத்துவரச்செய்தது. 90's கிட்ஸை கடைசிவரை சிங்கிளாகவே இருக்க செய்தது. எல்லோரையும் வாட்ஸ்ஸாப் மருத்துவராக்கியது. பசிப்பட்டினிக்கு ஒரு தடுப்பூசி கேட்கச்செய்தது, கேட்டவரை கெட்டவராக்கி அவர்மீதுபாய செய்தது.  செல்ப் கட்டிங் & ஷேவிங் செய்கிறேனென்ற பலரை ஒரேடியாக மொட்டை அடிக்க செய்தது.

கால்நடையாக சென்றவர்களை கால்நடைகள் போலவுமல்லாமல் அதற்கும்கீழாக நடத்தச் செய்தது. கோயம்பேடு மார்க்கெட்டினை தமிழ்நாட்டின் 'ஒரே இடம்' என்று அழைக்கும்படி செய்தது. பலநாள் குடிக்க முடியாமல் செய்தது, மீறிக்குடித்த இரண்டே நாளில் 17 கொலைகளையும் செய்தது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை கணக்காக, யாரு லீடிங் யாரு பின்னடைவு என்று மனித உயிர்களை காவுவாங்கி எண்ண வைத்தது. ஆலயம் நெக்ஸ்ட்  சௌச்சாலையா பர்ஸ்ட் என்று சொன்னவரை விட்டுவிட்டு, ஆலயத்திற்கு பதிலாக சிகிட்ஸ்ச்சாலையா & வித்யாலயாவுக்கு செலவளினு சொன்னவரை பாடாய்படுத்தியது.

கைதட்டி விளக்கேற்ற வைத்தது. ஓடி உழைத்த மருத்துவர்களுக்கு நன்றிகூற செய்தது, அப்படியே செய்ந்நன்றி மறக்கச் செய்து புதைக்கயிடமளிக்க மறுக்கவும் செய்தது. சொர்க்கத்தில் நிச்சயிப்பட்ட ஆயிரங்காலத்துப் பயிரை, இன்னும் விட்டால் நமக்கு அங்கேதான் நடக்குமோ என்றெண்ணவைத்து காணொளிக்காட்சி வாயிலாகவே நடக்கச் செய்தது. பலரது திறமைகளுக்கு வித்திட்டது. பலரை பலவாறாக பலவற்றிற்கு அடிமையாக செய்தது. டீபிக்கள் கணக்கில் இணையத்தை விரையமாக்க செய்தது. டிரோன்கள் என்பவை கல்யாணத்திற்கு மட்டுமல்ல கண்காணிப்பதற்கும் பயன்படும் என்பதையும் உணர்த்தியது. கடைசியாக சும்மா இருந்த என்னையும்கூட இப்படியொரு பதிவை போட செய்தது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க்கைத்துணை

மாற்றமில்லை