நானும் சில பெண்களும் - 1

 ஒரு 17 வயது சிறுமி, தான் முதன்முதலாக அவளாகவே தன்னந்தனியே தைரியமாக வெளியே சென்றுவந்ததைப் பற்றி புலங்காகிதம் அடைந்து சிலாகித்து உங்களிடம் எப்போதேனும் கூறியிருக்கிறாளா என்று எனக்குத் தெரியாது, ஆனால் என்னிடம் ஒருமுறை ஒரு சிறுமி* கூறியிருக்கிறாள், “இன்னைக்கு நானே தனியா வெளிய போய்ட்டு வந்தேன். அப்பா எங்கையோ வெளில வேலையா போய்ட்டதால நானே காலேஜ்ல இருந்து தனியா பஸ் ஏறி, இங்க இறங்கி ரொம்ப பசிச்சுச்சுன்னு ஹோட்டலுக்கு போய், ஜூஸ் ஒன்னு ஆர்டர் பண்ணி குடிச்சுட்டு வந்தேன். இதுக்கும் அங்க பில்லு கட்டுற இடத்துல ஒரே கூட்டம், நான் பொறுத்துப் பொறுத்துப்பார்த்து கோவத்துல எவ்ளோ நேரமா நான் நிக்குறதுனு அவுங்கள்ட சத்தம் போட்டுட்டு ஆர்டர்பண்ணி அப்புறம் குடிச்சுட்டு வந்தேன், எல்லாரும் என்னையவே பாத்தாங்க. நான் யாரையும் கண்டுக்காம குடிச்சுட்டு வந்துட்டேன்.” என்பதாய் கூறினாள். கூறிய விசயத்தை விட கூறிய விதத்தில் அவ்வளவு ஆச்சரியம் அவளது கண்களில் நான் பார்த்தேன், இதற்கும் முதன்முதலில் இதனை பகிர்ந்து கொண்டதும் என்னிடம்தான்.

( * - இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி 18 வயதிற்கு கீழுள்ள அனைவருமே சிறுவர் சிறுமியர் தான், இன்னும் சொல்லப்போனால் அவர்களை குழந்தைகளாகத்தான் நாம் கருத வேண்டும். இதனை இப்போது நான் இங்கு சொல்லக்காரணம், இப்பதிவை அச்சிறுமியும் படிப்பாள், என்னிடம் “நான் உங்களுக்கு சிறுமியா?” என்று கோபித்துக் கொள்ள வாய்ப்பு இருப்பதால் முன்னமே சொல்லிவைக்கிறேன். மன்னித்துவிடு சிறுமியே...🙏☺)

கூறிவிட்டு என் பதிலுக்காகக் காத்திருந்தாள், ஆனால் அப்போது பதிலேதும் சொல்லாமால், இன்னும் அதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல் பத்தோடு பதினொன்றாக கடந்துபோகும் விசயம்போல வெறுமனே அமர்ந்திருந்தேன். பெருத்த ஏமாற்றம் கண்களில், முகம் உடனே வாடிப்போயிற்று அவளுக்கு. நானும், “நான்லாம் 6-ஆவது 7-ஆவது படிக்கும்போதே போயிருக்கிறேனே தனியா வெளில”னு சொல்லிவிட்டு பேச்சை மாற்றினேன். பின்னர் வீட்டிற்கு வந்து அன்று இரவில், ஏன் எனது பதிலுக்கு பொக்குன்னு முகம் வாடிப்போனது என்று சற்றே நிதானித்து அதைப்பற்றி யோசித்தபோது தான் ஒரு விசயம் தெளிவாகப் புரிந்தது, ‘ஒரு பெண் தான் தனியாக சென்று வந்ததை பத்தோடு பதினொன்றாக கடந்து போகும் விஷயமாக எடுத்துக்கொள்ளாமல் மாறாக அதனை பெருமையுடன், ஒரு அரும்பெரும் சாதனை நிகழ்த்தியதற்கு ஒப்பாக கூறும்படி வைத்திருக்கிற ஆணாதிக்க மனோபாவம் நிறைந்திருக்கிற ஆண்கள்சூழ் உலகத்தில் நானுமொரு ஆணாக வெட்கப்படவேண்டும். சிறுமியை நான் இங்கு குறைகூறவில்லை, மாறாக அவளை இந்நிகழ்வினை அவளாகவே பெருமையாக எடுத்துக்கொள்ளும்படி செய்த எண்ணத்தை இந்த சமுதாயம் அவளுக்குள் விதைத்ததற்காக வருத்தப்பட்டேன்’.

நம்மில் பலர், இன்றும் 50/55 வயதினை கடந்த திருமணம் ஆன ஒருசில  பெண்களும்கூட இவ்வயதிலும் தனியாக அவர்களாகவே வெளியே போய்வந்த கதையை, அவர்கள் பெருமையாகக் கூற கேட்டிருக்கலாம். அவர்களுக்கு அப்போது தாம் குழந்தையாக இருக்கும்போது பெற்றோரிடமோ அல்லது திருமணத்திற்குப் பிறகு கணவரிடமோ இவர்களாகவே சுயமாக இயங்க அவர்களிடமிருந்து அனுமதி கிடைத்திருக்காது (‘சுயமாக இயங்க அனுமதி பெறுவது’ என்பதே ஒரு முட்டாள்தனம் தானே) தாயாகி பின்னர் பாட்டியாகும் நிலையில்தான், தான் சுதந்திரவாளி என்பதையே உணரத் தொடங்குகின்றனர். அந்தக்காலத்தில்தான் இதெல்லாம் என்று ஏதோ இதனை ஏற்றுகொண்டாலும் இந்தக்காலத்திலும் ஒரு பெண்ணை எல்லாவிதத்திலும் சார்ந்திருக்கும் படியேதான் வைத்திருக்க வேண்டும் என்கிற எண்ணம் முற்றிலும் அபத்தம் ஆகும். (வைத்திருக்க வேண்டும் என்கிற வார்த்தையே அபத்தம் என்பதையும் இங்கே சொல்லிக்கொள்கிறேன்)

பின்னர் அச்சிறுமிக்கு, ‘மன்னித்துவிடும்மா, நான் 6 7 வகுப்புகளில் படிக்கின்ற போது செய்த செயலை நீ உனது பதினேழாவது வயதில் செய்துள்ளாய். இதிலிருந்து இரண்டு விஷயம் புரிகிறது. ஒன்று, எல்லாருக்கும் எல்லாமும் ஒரேமாதிரியாக ஒரே காலத்தில் கிடைக்காது. இரண்டு, சமுதாயமும் அதனை ஏற்கவும் செய்யாது தரவும் செய்யாது. காலம் நேரம் கருதி முடித்துக்கொள்கிறேன். இப்போது நீ வியந்து மற்றவருக்கு சாதாரணமாக தோன்றிய காரியத்தைப்போல, நீ சாதாரணமாக செய்த காரியத்தை பிறர் வியந்துபேசும் நாளும் வரும், வரட்டும் என்று வாழ்த்துகிறேன்’ என்று ஒரு மெசேஜ் மட்டும் அனுப்பிவிட்டேன். இப்போதுதான் உள்ளூர் பேருந்துக்களில் பெண்களுக்கு இலவசம்தானே எனவே இனியாவது அவர்கள் படிதாண்டி வரட்டும், பேருந்தின் படிக்கட்டுகளைக் குறிப்பிடுகிறேன். என்னை வேறொரு கோணத்தில் யோசிக்கவைத்து இப்படியொரு பதிவினை பதிவிடசெய்த அந்த ஆச்சரியக் கண்களுக்கு நன்றி.

குறிப்பு: இதுபோல் ஏதோவொரு வகையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எப்போதோ எங்கேயோ எப்படியோ என்னை யோசிக்க, நேசிக்க, வாசிக்க, ரசிக்க, யாசிக்க, ருசிக்கவைத்த பெண்களைப்பற்றி ‘நானும் சில பெண்களும்’ என்கிற தலைப்பில் தனித்தனி பதிவுகளாகப் பதிவிடப்போகிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நினைவில் நின்றவர்கள்

பிரியமுடன் பிரியாவிடை

மாற்றமில்லை