நினைவில் நின்றவர்கள்

 நாம் எல்லோருமே நம்முடன் மிகவும் நன்றாக நெருங்கிப் பழகி, பின் ஏதோவொரு சந்தர்ப்ப சூழ்நிலையால் நம்மைவிட்டு பிரிந்துபோன எவரையோ மீண்டும் குறைந்தபட்சம் ஒருமுறையேனும் கண்டுவிட மாட்டோமா என்கிற ஏக்கத்தில் தேடியிருப்போம் அல்லது இப்போதும் தேடிக்கொண்டிருப்போம். அவர்கள் நமது பள்ளி அல்லது கல்லூரிப்பருவ நண்பர்களாக இருக்கலாம், அண்டை வீட்டுக்காரர்களாக இருக்கலாம், அலுவலக நண்பர்களாக இருக்கலாம், இன்னும் சொன்னால் பயணத்தில் நம்முடன் கூடப்பயணித்த சகப்பயணியாகக் கூட இருக்கலாம். அதாவது இன்றைக்கு மேம்பட்ட இணைய வசதி இருந்தாலும் அவர்களை தேடும் அளவிற்கு நம்மிடம் அவர்களது நினைவுகளைத்தவிர அவர்களைப் பற்றிய பெரிய அளவிலான தகவல்கள் இல்லாமலும் இருக்கலாம். அப்படி நான் சமீபத்தில், ஒரு பெண் அவருடன் சிறுவயதில் படித்த அவரது தோழியை தேடிக்கொண்டிருப்பதாக அவரது முகநூலில் பதிவிட்டிருந்ததை பார்த்தேன்.

அப்பெண்ணிடமும் அவர் தேடக்கூடிய தோழியைப் பற்றிய பெரிய தகவல்கள் ஏதும் இல்லை. இதனை நான் ஏன் இங்கு சொல்கிறேன் என்றால், நானும் அப்படிப்பட்ட இருவரை வெகுநாட்களாகத் தேடிக்கொண்டிருக்கிறேன். என்னிடமும் அவர்களது நினைவுகளைத் தவிர தேடிக் கண்டுபிடிக்கும்படியான பெரிய அளவிலான தகவல்கள் இல்லை. எனவே குறைந்தபட்சம் அவர்களை நான் தேடுவதை அவர்களைப்பற்றிய நினைவுகளை ஒரு பதிவாகவாவது பதிவிட்டு வைப்போம், இதுமூலம் அவர்களை கண்டுபிடிப்போமா என்பதைப் பின்னர் பார்ப்போம் என்றுதான் பதிவிடுகிறேன். ஆனால் நான் இங்கு பதிவிட்ட நோக்கம், இதனை படிகின்ற நீங்கள்கூட எவரையேனும் அப்படி தேடிக்கொண்டு இருக்கலாம், நீங்களும் இப்படி ஒரு பதிவிட்டு வையுங்கள், ஒருவேளை அவர்களது பெயர் முதற்கொண்டு உருவம் முதற்கொண்டு மாறிப்போயிருக்கலாம், எப்படியாகிலும் கிடைப்பார்களா என்று பார்க்கலாம். இதனை எழுதுகிற என்னையும் படிகின்ற உங்களையும்கூட எவரேனும் எங்கேனும் தேடிக்கொண்டுக்கூட இருக்கலாம்.

நான் தேடக்கூடிய முதல் நபர் ‘அபுதாகிர்’, என்னுடைய குழந்தைப்பருவ பள்ளித்தோழன். பொள்ளாச்சி, வெங்கிட ரமணன் ஐயர் வீதியிலுள்ள T.E.L.C துவக்கப்பள்ளியில் 1998-2000 ஆம் ஆண்டுகளில் என்னுடன் மூன்றாவது மற்றும் நான்காவது படித்தவன். ஆண்டு இறுதித் தேர்வு விடுமுறையில் என் வீட்டிற்கு வந்து தாங்கள் கரூருக்கு மாறிப்போவதாக சொல்லிவிட்டு போனான், அதற்குப்பின் இன்றுவரை அவனை நான் பார்க்கவேயில்லை. அவர்கள் பொருளாதரத்தில் சற்றே குறைந்திருந்த குடும்பமாதாலால் அப்பொழுதே படிகின்ற காலத்திலேயே இவனும் விடுமுறை நாட்களில் வடை போண்டா பஜ்ஜி என விற்றுவருவான், அதற்குபின் அவன் அங்கு கரூருக்குச் சென்று தனது படிப்பினை தொடர்ந்தானா இல்லையா என்பது தெரியாது, அவனது அப்பாவும் இவனை தொடர்ந்து படிக்க அனுமதித்தாரா இல்லையா என்பதும் தெரியாது. அப்போது தொலைபேசிகளும் பரவலாக எல்லார் வீட்டிலும் இல்லாத காலம் எனவே எண்கள் பரிமாற்றத்திற்கும் வாய்ப்பில்லை.

 

எனக்கு அவன் உடன்பிறந்தவர்கள், அவன் அப்பா பெயர், அவனுடைய பிறந்தநாள் என்று இப்படி எதுவும் தெரியாது, புகைப்படமும் கூட நாங்கள் ஒன்றாக சேர்ந்து எடுத்துக் கொள்ளவுமில்லை. அதன்பின் எங்கு எவர் ‘கரூர்’ என்று பெயர் எடுத்தாலே இவன் ஞாபகம்தான் எனக்கு முதலில்வரும். அப்போது அந்த ஊர் பொள்ளாச்சியில் இருந்து எங்கு இருக்கிறது என்றுகூட தெரியாது. ஐந்தாவது படிக்கும்போது ஒருமுறை கோவையில் இருக்கிற கருவலூர் என்கிற ஊருக்கு செல்லும்போதுகூட போகிற வழியெல்லாம் என் கண்ணில் அவன் எங்கேனும் பட்டுவிட மாட்டானா என்று பார்த்துகொண்டே வந்தேன், பின்னர்தான் புரிந்துகொண்டேன் அதுவேறு இதுவேறு என்று. நமக்கு கரூரில் சொந்தக்காரர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்றெல்லாம் எங்கள் வீட்டில் அனைவரிடமும் சிறுவயதில் கேட்ட ஞாபகம் இப்பொழுதும் இருக்கிறது. அப்படியாவது அங்குபோய் எப்படியாவது மீண்டும் அவனை பார்த்துவிட மாட்டோமா என்கிற ஒரு ஆசை அப்பொழுதே எனக்கு இருந்தது.

அதன்பின்னர் நானே கரூருக்கு செல்லும் சூழ்நிலையும் வந்தது, தொடர்ந்து மூன்றாண்டுகள்(2011-14) அங்கே இருந்தேன், அங்கேதான் நான் எனது முதுகலை பட்டப்படிப்பினை படித்தேன். அங்கே சேர்ந்து வகுப்பில் முதல்நாளே பெரும்பாலாக அனைவரிடமும் நான் கேட்ட கேள்வி, “உங்களுக்கு அபுதாகிர்னு யாராச்சும் தெரியுமா, தெரிஞ்சா அவுங்க புகைப்படம் இருந்தா காட்டுங்க?” என்பதுதான். என்னுடைய சீனியர்ஸ் பக்கத்துக்கு செக்சன் மாணவர்கள், ஹாஸ்டல்ல இருந்தவங்க இப்படி அங்க கரூர்காரர்கள் எல்லாரிடமும் கேட்டுப்பார்த்தேன் ஒரு பயனும் இல்லை. விடுமுறை நாட்களில் அங்கே வெளியே செல்லுமிடங்களில் எங்கேனும் அவனது பெயரை யாரேனும் கூப்பிடுவார்களா, கூப்பிடும் பட்சத்தில் திரும்புகிற ஆள் இவனாக இருந்துவிட மாட்டானா என்றெல்லாம் பார்ப்பேன், பயனில்லை. அவன் அங்கிருந்து போனதிலிருந்து இத்தனை ஆண்டுகளில் இங்கேயேதான் இருந்திருப்பான் என்று நானாக ஒரு அசட்டுத்தனமான குருட்டு நம்பிக்கையிலேயே தேடித் திரிந்திருக்கிறேன் என்பதை பின்னாளில் உணர்ந்தேன்.


நான் தேடும் இரண்டாவது நபர் ‘T.அபிநயா’, என்னுடன் பொள்ளாச்சி, புனித லூர்து அன்னை நடுநிலைப்பள்ளியில் 2001-04 ஆம் ஆண்டுகளில் ஆறாவது முதல் எட்டாவதுவரை படித்த, என்னுடைய ஆருயிர்த்தோழி இன்னும் சொல்லப்போனால் என்னுடைய செல்லத் தங்கை, ஆம் அவள் என்னை அன்போடு அண்ணா என்றுதான் அழைப்பாள் இதற்கும் அவள் என்னைவிட 7 மாதங்கள் மூத்தவள், 26-12-1990 அவளது பிறந்தநாள். அவளுக்கு இரு தங்கைகள் முதல் தங்கையின் பெயர் ஆர்த்தி, மேலும் அவளது அப்பாவினது பெயர் தெரியாது. ஆனாலும் அவளது ஊர் அய்யம்பாளையம் என்பது மட்டும் தெரியும், அதுவும் அவளது பெயரின் முதலெழுத்தைக் கொண்டே நினைவில் நிறுத்தியதால் இன்றும் மறக்காமல் உள்ளது. எட்டாவது வகுப்பில் அவள்தான் எனக்கு குரூப் லீடர்,  என் பக்கத்தில்தான் அமர்ந்திருப்பாள். பாடவேளையற்ற பொழுதுகளில் கதையளக்காமல் ஏதேனும் ஆக்கபூர்வமாக பேசிக் கொண்டிருப்போம், நாங்களிருவரும் சேர்ந்து அப்போது கணிதத்தில் ‘அபி-நோவா பார்முலா’ என்று ஒரு சூத்திரத்தைக்கூட உருவாக்கினோம்.

ஒன்றாகத்தான் சாப்பிடுவோம், சாப்பிட்டுவிட்டு தூக்கம் வந்தால் சற்றே என் மடியில் தலைசாய்த்து சிறிது கண் அயர்வாள். நானும் எப்பொழுதாவது ஏதேனும் சோகமாயிருக்கும் போது அவள் மடியில் தலைசாய்வேன். எனது தலையிலுள்ள சுழியைப்பற்றி சிலாகிப்பாள். எனக்கு முதன்முதலில் ரக்ஷாபந்தனுக்கு ராக்கி கட்டிவிட்டு, உன் தங்கச்சிக்கு எதாச்சும் வாங்கித்தா என்பாள். அந்தளவிற்கு அவளும் நானும் ஒருதாய் வயிற்று பிள்ளைகள்போல அவ்வளவு அன்னியோனியமாய் ஆனோம். ஒருமுறை இவளை என் வகுப்பு மாணவன் ஏதோ சொல்லிவிட, இவள் அழுததால் நான் சண்டைக்கு போனேன் அவனிடம், இதற்கும் அவன் என்னைவிடவும் பலசாலி நானோ படுநோஞ்சான். இவையெல்லாவற்றையும் விடவும், நான் கதை கவிதை கட்டுரை என்று இப்போது கிறுக்கிக் கொண்டிருப்பதற்கே அவள்தான் முதல் ஊற்றுகாரணியாவாள். முதன்முதலில் நான் அவளுக்காகத்தான் கவிதை என்கிற பெயரில் நான்குவரியை எழுதிக் கொடுத்தேன்.

அபிநயா:

அ – அன்பானவள்

பி – பிரியமானவள்

ந – நல்லவள்

யா – யாவருக்குமானவள்

இதுதான், நான் எழுதியது. படித்ததும் மகிழ்ச்சியில் நீ பிற்காலத்தில் நல்லா வருவடா அண்ணானு சொன்னாள். பின்னர் தேர்வுகள் முடிந்தபின், அவரவர் பள்ளி மாற்று சான்றிதழ்கள் வாங்கியபின் இப்போதுவரை அவளை நான் கண்கூடாக பார்க்கவில்லை. அதற்கப்புறம் பத்தாவதுவரை மாரியம்மாள் உயர்நிலைப் பள்ளியிலும் அதன்பின்னர் நாச்சிமுத்து தொழில்நுட்பக் கல்லூரியிலும் அதன்பின்னர் பொறியியல் படித்ததுவரைதான் தெரியும் அதுவும் எந்த கல்லூரி என்பதெல்லாம் தெரியாது. இவைகள் பிற நண்பர்கள் மூலம் செவிவழியாக அறிந்தவைதான். அதன்பின்னர் இன்றுவரை எல்லா சமூக வலைத்தளத்திலும் நான் தேடும் முதல் பெயராகிப்போனாள் அவள். இப்பொழுது ‘திருமதி.அபிநயா’ என்று ஆகிப்போயிருப்பாள், ஒருசிலர் ஆங்காங்கு பார்த்ததாக இப்போதும் கூறுவர், அப்படியானால் அவளது போன் நம்பர் அல்லது வாட்ஸ் அப் நம்பர் இருந்தா தாங்கன்னு கேட்டால், பேசும் அளவிற்கு பார்க்கவில்லை போகும் வழியில் எதிரேதான் பார்த்தேன் என்று அப்படி இப்படிதான் சொல்லுவார்கள், இதிலும்  பயனில்லை.

இருவரையும் நான் நேரில் ஒருமுறை மீண்டும் பார்க்கவேண்டும் என்கிற ஆவல் உள்ளது, குறைந்தபட்சம் அவர்களை நான் இன்றும் மறக்காமல் அதே உயிர்ப்புடன் அதே நட்புடன் காண ஆவலாக இருக்கிறேன் என்கிற விசயம் மட்டுமேனும் அவர்களை சென்றடைய வேண்டுமென்கிற எண்ணம் மட்டுமே மிஞ்சி நிற்கிறது. அவர்களுக்கு என்னைப்பற்றிய நினைவுகள் இப்போது இருக்குமா இல்லையா என்பதெல்லாம் தெரியாது. எல்லா ராம்களும் ஜானுக்களுக்காக மட்டுமே அங்கேயே விட்ட இடத்திலேதான் இருக்கவேண்டுமா, மாறாகா சுபாஷினிகளுக்காக சதிஷ்களுக்காகவும்கூட விட்ட இடத்திலேயே இருக்கலாம்தானே, அவர்களும்கூட என்னை ஒருமுறையேனும் தேடியிருப்பார்கள் என்கிற நம்பிக்கையிலேயே இப்பதிவை முடிக்கின்றேன்.

நன்றி.!

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிரியமுடன் பிரியாவிடை

மாற்றமில்லை