பிரியமுடன் பிரியாவிடை

 “ஊரு ஒலகத்துல இருக்குற யார்யாருக்காகவோ Write-Up எழுதுறியே, உன் பிரண்ட் நானு, எனக்கு ஒன்னு எழுதணும்னு தோணுச்சாடா உனக்கு?”, என்று உரிமையோடு இப்படி என்னிடம் செல்லமாக கோபித்துக்கொள்ளுமளவு பிரியத்திற்கு சொந்தக்காரியானவளுக்கு....

K.தாமரைச் செல்வி’, இப்பெயரை 2008-இல் ஆகஸ்ட்டு மாதத்தின் மூன்றாவது வாரத்தின் ஒரு நன்னாளில், பொள்ளாச்சி நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கலை அறிவியல் கல்லூரியின் புத்தகச் சாலையில் B.Sc. Computer Science – Aided (2008-2011) என்று முகப்பில் ஒட்டியிருந்த ஒரு நோட்டில் கண்டபோது, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அப்போது அளவேயில்லை. ஒரு பெயர் என்னை ஏன் இவ்வளவு மகிழ்ச்சிக்குள்ளாக்கியது என்று படிக்கிற எவருக்கும் ஒரு கேள்வி எழலாம். பின்னர் இருக்காதா, இனிமேல் பார்த்துக்கொள்வோமா மீண்டும் நட்பினை தொடர இனியேதும் வாய்ப்பு இருக்குமா என்று நினைத்து ஒருவருக்கொருவர் பரஸ்பரம் விடைபெற்றபிறகு மீண்டும் அதேப்பெயரானது 4 ஆண்டுகள்கழிந்து கண்ணில்பட்ட மகிழ்ச்சிதான் அது.

இன்னும் நன்றாகவே நினைவிருக்கிறது, 2004-ஆம் ஆண்டு மே மாதத்தின் தொடக்க வாரத்தில், பொள்ளாச்சி புனித லூர்து அன்னை நடுநிலைப் பள்ளியில் 8-ஆவது முடித்து TC வாங்கவந்த சமயத்தில் நான் பார்த்த கடைசி முகம், நான் வாங்கவந்த சமயத்தில்தான் நீயும் வந்திருந்தாய் உனது தந்தையோடு. “Bye Bye தாமு” என்று சொல்லிவிட்டுப் போனேன். அன்று அந்த நொடியில் மேற்குறிப்பிட்டிருந்தவாறே அப்படியொரு நினைவு வந்தது. அதன்பின் 4 ஆண்டுகள்கழிந்து கல்லூரியில் அதேப்போல சகவகுப்புத் தோழியாய் எதிர்பாராமல் மீண்டும் கிடைத்த மகிழ்ச்சிதான் நான் முன்னர் சொன்னது, இன்னும்கூட விரிவாகவே சொல்கிறேன்.

ஆம், நான் +2 முடித்து விடுமுறையில் எனக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதன்விளைவாக, கல்லூரிகளெல்லாம் ஜூன் மாதமே ஆரம்பமான பிறகு எனக்கு ஒரு வருடம் வீணாகிவிடுமே என்கிற காரணத்தால் நல்ல மனிதர் ஒருவரது பரிந்துரையின்பேரில் அதே ஆண்டே ஆகஸ்ட்டு மாதம் N.G.M. கல்லூரியில் B.Sc. Computer Science படிப்பில் சேர்ந்தேன். அப்போது என் மனவோட்டமெல்லாம், எப்படியும் நான் படிக்கப்போகும் வகுப்பில் அனைவரும் அனைவருக்கும் அறிமுகமாகி, அனைவரும் அனைவருக்கும் நண்பர்களாக ஆகிப்போயிருப்பார்கள், நான் இப்போது புதிதாகப் போனால் என்னை அவர்களோடு சகவகுப்புத் தோழனாக ஏற்றுக்கொள்வார்களா என்கிற அச்சமாகவே இருந்தது.

அத்தகைய சூழலில்தான் Admission போட்டுவிட்டு Books எல்லாம்  Store-இல் வாங்கிக் கொள்ளும்படி சொன்னதால், அங்கு சென்று புதிதாக சேர்ந்துள்ளதைச் சொல்லி அவர்கள் தந்த அந்த நோட்டில் என் பெயரினை எழுதி கையெழுத்திட்டு புத்தகங்களை பெற்றுக்கொண்ட பிறகு, திடீரென ஒரு எண்ணம் எதற்கும் அதே வகுப்பில் எனக்குத் தெரிந்தவர்கள் எவரேனும் படிக்கிறார்களா, ஏதேனும் தெரிந்த பெயர் ஒன்றேனும் கண்ணில் பட்டுவிடாதா என்றே முன்னுள்ள பெயர்களை ஒவ்வொன்றாக படித்துப்பார்த்தேன், நல்லவேளையாக அப்போதே என் தேடலுக்கு பதிலாக ‘K.தாமரைச் செல்வி’ என்கிற உன் பெயர் கண்ணில்பட்டு, என்னை ஆறுதலோடு சேர்ந்து ஆனந்தமும்படுத்தியது.

Admission போட்டுவிட்டாலுங்கூட நான் என்னமோ நமது வகுப்பிற்கு முதன்முதலாக வந்தது செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி அன்றுதான். அன்றைக்குங்கூட காலையிலிருந்து, உனக்கு என்னை நினைவிருக்குமா, இருந்தாலுங்கூட இப்போதும் அதே நட்பினை என்னோடு பேணுவாயா என்கிற குழப்பமும், மீண்டும் உன்னை காணப்போகும் மகிழ்ச்சியுமே என்னை ஆக்கிரமித்திருந்தது. அப்படியே வகுப்பிற்குள் நுழைந்த அம்முதல் நொடியில் நான் தேடிக்கண்டடைந்ததும் உனது முகம்தான். அப்போதே ஒரு ஆச்சர்யக்குரலும் “நோவா...!” என்றென்செவியை வந்தடைந்தது. நானும் நுழையும்போதே “Hai தாமு.!” என்று உனக்குச் சொல்லிக்கொண்டே வந்தததும், அன்று இடைவேளையின்போதே உன்னிடம்வந்து “உன்னை நம்பித்தான் இவ்வகுப்பிற்கே வந்திருக்கிறேன் தாமு, என்னைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்” என்று உன்னிடம் சொன்னதும் அப்படியேயின்றும் நினைவாய் என் மனதில் தேங்கியிருக்கிறது.

அன்றிலிருந்து இன்றுவரை நமது நட்பானது குறைந்துபோகாது நாடுவிட்டு நாடு, கண்டம்விட்டு கண்டம் நீ தாண்டிப்போனாலுங்கூட தொடர்ந்துகொண்டே இருக்கிறது. பணிநிமித்தம் தனியொருவளாய் ஆஸ்திரேலியாவரை சென்று, உனது குடும்பத்தைத் தாங்கும் ஆதாரத்தூணாகி, பின்னர் உனக்கென்றாகிப்போன உன் குடும்பத்துடனும் இன்றும் உழைத்துக்களைத்து ஆண்டுகள் கடந்து விடுமுறையில் இந்தியா வந்து மீண்டுமாய் புது உற்சாகத்தினை, மகிழ்ச்சியினை, தெம்பினை & அனைவரது நினைவுகளையும் நிரம்பப் பெற்றுக்கொண்டபின் இப்போது மீண்டும் புறப்படும் உனக்கு, பிரியாவிடை கொடுப்பதற்கு பதிலாக பிரியமுடன் பிரிவுபச்சாரமடலாக இப்பதிவினை சமர்ப்பிக்கிறேன்.

உன்னை அன்றிலிருந்து இன்றுவரை பெரும்பாலும் ஆண்டுகள் கழிந்த இடைவெளிகலேயே சந்திக்க நேரிடும் மாயத்தினால் நமது நட்பினை ஒன்றும் மாற்றிவிடவெல்லாம் முடியாதுதான். பார்த்து பத்திரமாகப் போய்வா அன்புத்தோழி, அதுவரை இம்மடலே நமக்கான நினைவுப்பாலமாக இருக்கட்டும். மீண்டுமாய் ஒருமுறை இப்போதும், சிறுவயதில் நான் உன்னிடம் சொன்ன அதே “Bye Bye தாமு”.!



 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நினைவில் நின்றவர்கள்

மாற்றமில்லை