சும்மா பேருக்காக...

உங்களது பெயரே என்றைக்கேனும் உங்களுக்கு கோபமூட்டியுள்ளதா? உங்களது பெயரானது உச்சரிக்கப்பட்டதால் என்றைக்கேனும் கோபம் அல்லது வருத்தம் அடைந்துள்ளீர்களா? இங்கு நான் குறிப்பிடுவது, தமது பெயர் பிடிக்காமல் வருவதால் ஒருவருக்கு வரும் கோபத்தை வருத்தத்தைப் பற்றியோ, சாதி மத ரீதியிலான காரணத்தால் வரும் கோபத்தை வருத்தத்தைப் பற்றியோ அல்ல, மாறாக நமக்கு பிடித்த பெயரே நமக்கு இவ்வாறான உணர்வுகளை தருவதை பற்றியது. மனதுக்கும் உணர்வுக்குமான தொடர்பிலிருந்து இதனை வேறொரு கண்ணோட்டத்தில் கொஞ்சம் அணுகிப்பார்ப்போம்.

"என்னுடைய முழுப்பெயரை என் வாழ்நாளின் 
கடைசிவரை உச்சரிக்காத உச்சரித்தும்விடாத
ஒரு நண்பரை வேண்டுவதேயென் வேண்டல்.!"

இக்கவிதையை படித்தவுடனே தங்களுக்கு என்ன தோன்றியது, என்னமாதிரியான உணர்வு வந்தது? ஒரு சிலருக்கு ஒரு மாதிரியாகவும் இன்னும் சிலருக்கு வேறு மாதிரியாகவும் வேறு சிலருக்கு பல மாதிரியாகவும் தோன்றியிருக்கும் முதலில் இது கவிதையா என்றேக்கூட உங்களில்  நிறையபேருக்கு சந்தேகம் தோன்றியிருக்கலாம். ஆம் இது ஒரு கவிதைதான், நம்புங்கள் ஏனென்றால் இதனை நான் எழுதவில்லை, ஆகவே நீங்கள் என்னை தாராளமாக நம்பலாம். 

நல்ல நண்பர்களுக்கு, நட்பை நேசிப்பவர்களுக்கு, உணர்வுக்கு மதிப்பளிப்பவர்களுக்கு இது படித்தவுடன் பிடித்துவிடும் புரிந்தும்விடும், ஏனெனில் இதில் அனைத்திலும் மனத்துக்கும் பெரும்பங்குண்டு. இதுவும் மனதோடு தொடர்புடைய ஒரு கவிதை தான், எப்படியெனில் இது ஒரு 'மனதின் குரலாக' உள்ளது. ஐயகோ, அப்படிக்கூறினால் அது குறிப்பிட்ட ஒருவரை நேரடியாக சாடுவதைபோல் உள்ளதோ வேண்டாம் பாவம் அவர். எனவே 'ஒரு மனதின் வேண்டல்' என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம் இக்கவிதையை.

நமக்கு என்னதான் பெயரென்று ஒன்று இடப்பட்டிருந்தாலும் நமக்கு மிகவும் நெருக்கமானவர்களோ அல்லது உயிர்நண்பர்களோ பெரும்பாலும் நம்மை கண்டிப்பாக ஏதேனும் பட்டப்பெயர் அல்லது செல்லப்பெயர் வைத்துத்தான் கூப்பிடுவர். பழக ஆரம்பித்த புதிதில் அனைவருமே அனைவரையும் அவரவர் பெயரை சொல்லித்தான்  கூப்பிட்டு இருப்பர். எப்பொழுது ஒருவரிடம் நாம் ஒருவித அந்நியோன்னியத்தை உணருகிறோமோ, அப்பொழுது நாம் அனைவருமே செய்வது யாரிடம் அதை உணர்ந்தோமோ அவரின் பெயரை உச்சரிக்க தயங்கியோ அல்லது இனி நான் மட்டுமே உச்சரிக்க வேண்டுமெனவோ இன்னும் தனித்துத் தெரிய வேண்டுமென அவருக்கு ஒரு பெயர் இடுவோம்.

அப்பெயர் செல்லப்பெயராக இருக்கலாம், பட்டப்பெயராக இருக்கலாம் இன்னும் அவரது பெயரை சரியாக உச்சரிக்க முடியாத நிலையில் தவறான உச்சரிப்பால் உருவான பெயராகக்கூட இருக்கலாம்.உருவம், குணம், இயலாமை இன்னும் சிலவற்றின் காரணமாக ஆகிப்போன பெயராக கேலி கிண்டலுக்குக்காக வைக்கப்பட்ட ஆகுபெயராகவும் இருக்கலாம். இப்படி நாம் வைத்த பெயரிலேதான் நாம் கூப்பிட ஆரம்பிப்போம், நமக்கும் அப்படி யாரேனும் பெயரிட்டிருந்தால் அப்பெயரையும் ஏற்றுக்கொள்ள பழகுவோம், பின் ஏற்றும்கொள்வோம் நம்மீதோ அவர்மீதோ தாம்கொண்டுள்ள உரிமையாகயெண்ணி நாம் ஒவ்வொருவருமே செய்யும் முதல் உரிமைமீறல் அது, அது உரிமைமீளலுக்கும் சிலசமயம் உதவும், அது தவறுமல்ல. 

ஒருவருக்கொருவர் நன்றாக பழகியபின்னர் அவரே நம்மை நமது பெயரை ஏதேச்சையாக சொல்லிக்கூப்பிட்டாலும், வேறுயாரையோ கூப்பிடுவதுபோல் திரும்பாமல் இருப்போம். அந்த அளவிற்கு நம் மனம் அவரிட்ட பெயரில் மூழ்கியிருக்கும் லயித்துப்போயிருக்கும், நாமும்கூட அவரது உண்மையான பெயரே மறந்துபோகும் அளவிற்கு நாம் நேசிக்கும் ஒருவரை நாமிட்ட பெயரில் அழைத்திருப்போம். இதுமாதிரி என்னை பல பல செல்லப்பெயர்களில் பட்டப்பெயர்களில் கூப்பிடும் நண்பர்கள் எனக்குண்டு, அதேப்போல் உண்மையான பெயரே மறந்துபோகும் அளவிற்கு செல்லப்பெயர் வைத்து நான் கூப்பிடுமளவிற்கான நண்பர்களும் எனக்குண்டு.

இப்படியிருக்கும் தருணமொன்றில் ஒரு சின்ன மனஸ்தாபமோ அல்லது கோவமோ வரும்பொழுது, நாம் முதலில் எடுக்கும் ஆயுதம் அவரது பெயர் தான் அதாவது Mr. / Ms./  Mrs. என்று மரியாதையுடன் அவரது முழுப்பெயரை கூறுவோம். நீங்கள் இப்படி செய்வீர்களா என்று எனக்கு தெரியாது, ஆனால் நான் இப்படித்தான் எனக்கு மிகவும் பிடித்தவர்களுடன் சண்டை வந்தால் முதலில் இப்படிகூறித்தான் ஆரம்பிப்பேன் அல்லது நான் அவர்மீது கோபமாக இருக்கும்போது இப்படித்தான் அழைப்பேன். என்னையும் இப்படியே கோவத்தில் 'Mr. பாஸ்கரானந் நோவா அவர்களே' அப்படினு சொல்லி தங்களது எதிர்ப்பினை வெளிக்காட்டும் நண்பர்கள் நிறைய உண்டு. 

இது விளையாட்டுக்கான சண்டையாக இருந்தால் நலம், ஆனால் இதுவே நமக்கு ஒருவித சங்கடத்தை தரும். அதுவே அதி தீவிரமான ஒரு பெரும்சண்டையாக இருக்கும்பட்சத்தில் என்னமாதிரியான ஒரு மன உளைச்சலை தரும் அப்படியொரு யோசனையில் தானோ அதுமாதிரியான தருணம் தருகின்ற கொடுமையினை உணர்ந்தவராய் இக்கவிதையை எழுதியவரும் எழுதியிருப்பாரோ என்று யோசிக்கவைக்கிறது என்னை. இங்கு நிதானமாக பார்த்தால் நம்மை ஒருவர் மிகவும் மரியாதையாக நமது முழுப்பெயரை சொல்லி அழைக்கிறார், ஆனால் நமக்கு கோவம் அல்லது சங்கடம் வருகிறது ஏனென்றால் நாம் அதனை மரியாதை என்று ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை, அதானே அர்த்தம்.

அப்படிப்பட்ட நபரிடமிருந்து வரும் அந்த செல்லப்பெயர் அல்லது பட்டப்பெயரே அவர்மீது நாம் வைத்திருக்கும் மானசீக மரியாதையாக பார்க்கின்றோம். இன்னுமே தெளிவாக சொன்னால், 'வில்லாதி வில்லன்' திரைப்படத்தில் நக்மாவின் அப்பாவாக வரும் சத்யராஜ் அவருடைய மனைவியாகிய ராதிகாவை ஒரு செல்லப்பெயர் வைத்துதான் எப்பொழுதும் கூப்பிடுவார். ராதிகாவும் அவரிடம் அவரது முழுப்பெயரை சொல்லி ஒருமுறையேனும் கூப்பிடுங்கள் என்று பலமுறை கெஞ்சிக்கூட பார்ப்பார். ஆனால் சத்யராஜ் மசியவே மாட்டார், என் மனைவியை நான் எனக்கு பிடித்தவாறுதான் கூப்பிடுவேன் என்பார், ஆனாலும் நான் சாகும் முன் ஒருமுறையேனும் உன் விருப்பத்திற்காக உன் முழுப்பெயரை சொல்லி கூப்பிடுவேன் என்று உறுதியளித்திருப்பார். 

ஒரு கட்டத்தில் அவர் தன் மனைவியை அவரது முழுப்பெயரை சத்தமாக சொல்லி கூப்பிடுவார், அப்போது ராதிகா சற்று நிதானித்து அவர் தற்கொலை முடிவு எடுத்துவிட்டாரென வேகமாக அவரை காப்பாற்ற ஓடுவார், ஆனால் அவர் தன்னை சுட்டுக்கொண்டு இறந்துவிடுவார். இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புவது ராதிகா ஆசைப்பட்டது நடந்தது ஆனால் அதின் முடிவு வருத்தத்தை தந்தது. அதுபோல மேலும் சுட்டிக்காட்ட விரும்புவது சத்யராஜின் பார்வையிலிருந்து நமக்கு விருப்பமானவர்களை நாம் நமக்கு பிடித்தமாதிரி கூப்பிடலாம் தப்பில்லை, நம்மையும் நமக்கு பிடித்தவர் வேறொரு பெயரிட்டு அழைப்பதையும் நாம் முழுமனதுடன் ஏற்றுக்கொள்கிறோம், ஆனால் அவரே நம் பெயரையோ அல்லது நாம் அவரது பெயரையோ சொல்லும்போது மனம் சங்கடப்படும்.

ஒரு பேருக்கு இத்துனை அக்கப்போரு தேவையா என்று கேட்க தோன்றுகிறதா, நானும் சும்மா பேருக்காக இதனை எழுதவுமில்லை என்று கூறி முடிக்கிறேன்....!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நினைவில் நின்றவர்கள்

பிரியமுடன் பிரியாவிடை

மாற்றமில்லை